முந்தைய தலைமுறையினரைப்போல் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலை என்று இருப்பது இன்றைக்கு புத்திசாலித்தனமில்லை. ஆடையை மாற்றுவது போல வேலை மாற்றம் என்பது இன்றைய தனியார் உலகின் அத்தியாவசியத் தேவையாக மாறியிருக்கிறது. ஆனால் வேலை மாற்றம் என்பது அத்தனை எளிதான காரியம்தானா?எதற்கு வேலை மாற வேண்டும்? இந்த வேலைக்கு என்ன குறைச்சல்? இதிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறமுடியுமா என்ன? எதற்கு அந்த ரிஸ்க்? அதற்கான தகுதியும் திறமையும் எனக்கு உண்டா? அதற்கான தேவை எனக்கு இருக்கிறதா?சரியான இடம், மிகச் சரியான வேலை, உரிய அங்கீகாரம், முறையான சம்பளம், நிஜமான மனத் திருப்தி இவை அனைத்துமே வேலை மாற்றம் இன்றி சாத்தியப்படாது. இப்போது இருக்கின்ற வேலையில் இவை- எல்லாம் கிட்டாதபோது, கிடைக்கின்ற இடத்தை நோக்கி மனம் ஈர்க்கப்படுவது இயல்பே. ஆனால் எப்படி, எங்கே, எப்போது நம் வேலை மாற்றம் இருக்க வேண்டும் என்ற சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம்.வேலை மாற்றத்துக்கான தேவையை உணர்ந்துகொள்வது முதல் அதற்காக நம்மைத் தயார்படுத்துவது வரை பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார் சிபி கே. சாலமன். மனத்தடைகளைத் தகர்ந்தெறிந்து, வேலை மாற்றத்தின் மூலம் நம் வாழ்வையே அடுத்த கட்டத்துக்கு மாற்றி அமைப்பதற்கான மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.